பதிவு செய்த நாள்
26
ஜூன்
2021
04:06
சென்னை:கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதும், முதல் நடவடிக்கையாக, கோவில்கள் திறக்கப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பொது மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள், குறைகளை தெரிவிக்கும் வகையில், குறைகேட்பு மையம், சென்னை நுங்கம்பாக்கம் தலைமையகத்தில் நேற்று திறக்கப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
பின், அவர் கூறியதாவது:அறநிலையத்துறை தொடர்பான குறைகளை தெரிவிக்கும் வகையில், பக்தர்கள் குறைகேட்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலக நாட்களில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, 044- 2833 9999 என்ற, தொலைபேசி எண்ணில், பக்தர்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். புகாருக்கான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்; நடவடிக்கை விபரங்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களில் தெரிவிக்கப்படும். கொரோனா தொற்று முழு கட்டுப்பாட்டிற்கு வந்ததும், முதல் நடவடிக்கையாக, கோவில்கள் திறக்கப்படும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.