பதிவு செய்த நாள்
29
ஜூன்
2021
02:06
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவில் சொத்துக்களை மீட்போம்; பணியாளர்களை பாதுகாப்போம் எனக் கூறும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாக, செய்திகள் வருகின்றன. இதனால், கோவில்களுக்கு இழப்பு ஏற்படும்.எனவே, கோவில்களுக்கு வாடகை பாக்கி வைக்காதவர்கள், தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும்.
இதர ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து, அந்த சொத்துக்களை ஏலம் விட்டு, கோவில்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.நான் முதல்வராக இருந்த போது, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றும், 2,000 தினக்கூலிகள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள், தகுதி அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்தேன்.அதன்பின், கொரோனா மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக, இப்பணி நிறைவடையவில்லை. தற்போது, அறநிலையத்துறை கமிஷனர், 40 ஆயிரம் பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், அவர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே, அரசு, இந்த தேவையற்ற முடிவை கைவிட்டு, நான் அறிவித்தபடி, குறைந்த சம்பளத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் பணியாளர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.