பதிவு செய்த நாள்
29
ஜூன்
2021
02:06
சென்னை : தனியார் வசம் உள்ள பழநி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அறநிலை யத்துறை வசம் எடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்று, பழநியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில்; ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இங்கிலாந்து மகாராணி, 1863ம் ஆண்டில், இந்தக் கோவிலுக்கு 60 ஏக்கர் நிலத்தை மானியமாக வழங்கினார்.தாராபுரம் தாலுகா, பெரிய குமாரபாளையம் கிராமத்தில் நிலம் உள்ளது.இந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு, ஸ்ரீரங்க கவுண்டர் மற்றும் ராமசாமி கவுண்டருக்கு உள்வாடகைக்கு வழங்கப்பட்டது. 1960ல், இனாம் ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.இதையடுத்து, நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி, ஈரோடு நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஈரோடு நீதிமன்றம், கோவில் மூலவருக்கே நிலம் சொந்தம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, விளை நிலத்தின் சுவாதீனத்தை கோவிலுக்கு வழங்கக் கோரி, தாராபுரம் முன்சீப் கோர்ட்டில், கோவில் நிர்வாக அதிகாரி வழக்கு தொடர்ந்தார். அதேநேரத்தில், நிலத்தின் மீது தங்களுக்கு உரிமை உள்ளது என, இருவர் தரப்பிலும் முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழநி பாலதண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை, நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் விசாரித்தார்.மூன்றாவது சுற்று மனுதாரர்கள் தரப்பில், பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருவதால், எங்களுக்கு உரிமை உள்ளது. ஆங்கில அரசால் வழங்கப்பட்ட நிலம், பாலதண்டாயுதபாணி சாமிக்கு வழங்கப்படவில்லை; மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவிலுக்கு தான் வழங்கப்பட்டது என வாதிடப்பட்டது.கோவில் நிர்வாகம் சார்பில், பாலதண்டாயுதபாணி சாமியும், திருமூர்த்தியும் ஒரே சாமி தான். மலை உச்சியிலும், மலை அடிவாரத்திலும் உள்ள கோவில்களை, ஒரே தேவஸ்தானம் தான் நிர்வகிக்கிறது என, வாதிடப்பட்டது.
இவ்வழக்கில், நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:கோவில் சொத்தில், தலைமுறையாக இவர்கள் உட்கார்ந்துள்ளனர். இது, மூன்றாவது சுற்று வழக்கு. பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான இந்த நிலம், 60 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் அனுபவத்தில் இல்லை.நடவடிக்கைகுழந்தைகளை பொறுத்தவரை, அவர்களுக்கு நீதிமன்றம் தான் பாதுகாவலர் என்ற சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கும், அவர்களின் சொத்துக்கும், நீதிமன்றம் தான் பாதுகாவலர்.
கர்ப்பகிரஹத்தில் உள்ள சிலைக்கும் நீதிமன்றம் தான் பாதுகாவலர். குழந்தையை பாதுகாப்பது போல, சாமி சிலைக்கு சொந்தமான சொத்துக்களையும் நீதிமன்றம் தான் பாதுகாக்க வேண்டும்.எனவே, அந்த சொத்துக்களை, நிர்வாக அதிகாரி வசம் எடுக்கும்படி, நான்கு வாரங்களில் அறநிலையத் துறை கமிஷனர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். நிலத்தை மனுதாரர்கள் ஒப்படைக்கவில்லை என்றால், உத்தரவை விரைந்து அமல்படுத்த, கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. ஈரோடு, தாராபுரம் நீதிமன்ற உத்தரவுகள் உறுதி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி டீக்கா ராமன் உத்தரவிட்டார்.