பதிவு செய்த நாள்
02
ஜூலை
2021
04:07
அவிநாசி;கிராமத்து மண் வாசனை நிறைந்த கொங்கு மண்டலத்தில், வாகன போக்குவரத்து இல்லாத காலத்தில், மாட்டு வண்டி பயணம், கழுதைகளில் சுமையேற்றி செல்வது, தலைச்சுமையுடன் நடந்து செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
பாதசாரிகள் ஆங்காங்கே இளைப்பாற, சாலையோரம் நிழல் தரும் மரங்கள், கிணறு, சுமைதாங்கிக் கற்கள் வைக்கப்பட்டன. கிராமங்களில் பட்டி அமைத்து மேய்க்கப்படும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் வெள்ளாடுகள் மற்றும் கால்நடைகளின் தாகம் தணிக்க, கிராமங்களில் சாலையோரம் உள்ள பொது கிணறுகளின் அருகில், கல் தொட்டிகள் அமைக்கப்பட்டன.கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, கல்தொட்டிகளில் நிரப்பி வைத்து, கால்நடைகளின் தாகம் தணித்தனர். இத்தகைய கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி, அவிநாசி சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஆதாரம்பாளையம் பிள்ளையார் கோவில் முன், வரலாற்று ஆய்வாளர்கள் முடியரசு, சிவகுமார், பிரவீன் குமார் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது:தொட்டியின் பக்கவாட்டில் உள்ள கல்வெட்டில் கலியுக சகாப்தம் என எழுதப்பட்டுள்ளது; இது, கி.பி., 1751ம் ஆண்டை குறிக்கிறது. இக்கல்தொட்டி கிட்டத்தட்ட, 270 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.கல்வெட்டில் உள்ள வாசகத்தின் அடிப்படையில், இதை அமைத்தவர் பச்சா கவுண்டர் மகள் பாண்டியம்மாள் என அறிய முடிகிறது சில வரிகள் சிதைவுற்று இருப்பதால் ஓரிரு நபர்களின் பெயர் விடுபட்டிருக்கலாம். அண்ணமார் ஸாமி அருள் என வாசகம் முடிகிறது. ஏழு அடி நீளம், இரண்டு அடி அகல, உயரம் கொண்டதாக உள்ளது.நாயக்கர் ஆட்சிக்குப்பின், கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். இவை, கொங்கு மண்டலத்தில், கல்லு பண்ணைகள் எனவும் அழைக்கப்படுகின்றன தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு, முடியரசு கூறினார். ஆடுகள், காடுகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் வெள்ளாடுகள் மற்றும் கால்நடைகளின் தாகம் தணிக்க, கிராமங்களில் சாலையோரம் உள்ள பொது கிணறுகளின் அருகில், கல் தொட்டிகள் அமைக்கப்பட்டன.