பதிவு செய்த நாள்
03
ஜூலை
2021
10:07
சென்னை: நடிகர் அர்ஜுன் கட்டிய, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
நடிகரும், ஆஞ்சநேய பக்தருமான அர்ஜுன், போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில், அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற, கோவிலை கட்டியுள்ளார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித்து அர்ஜுன் கூறியதாவது:இந்தக் கோவில் என், 17 ஆண்டு கனவு. என் குடும்பத்தினர், என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இக்கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இச்செயலை செய்ய துாண்டியது என்பதே உண்மை. ஸ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை. 180 டன் எடை உடையது. இது தான் முதல், 180 டன் எடை உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்கின்றனர்.
ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் இங்குள்ளன. பெஜாவர் ஸ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள், இந்த கோவிலை பிரதிஷ்டை செய்து கொடுத்தார். முன்னதாக அவர் அயோத்தி சென்றிருந்தார். அங்கிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணின் மீது, இந்த கோவிலின் ஸ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, இங்கு வந்து சுவாமியின் தரிசனம் செய்தார்; அவர் வந்தது மகிழ்ச்சி. விரைவில், இக்கோவிலை பொதுமக்களுக்காக திறப்போம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை இவ்வாறு அவர் கூறினார்.