பதிவு செய்த நாள்
07
ஜூலை
2021
05:07
கோவை: கோவில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை இறக்கி வைத்து நிம்மதி அடைந்தனர்.கொரோனா பரவலால், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டன. தொற்று நோயால் நிம்மதி இழந்து காணப்பட்ட மக்கள், கோவில்களுக்கு சென்று தங்கள் மனக்குறைகளை தெய்வத்திடம் முறையிட முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், நேற்று அனைத்து மதவழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டன. காத்திருந்த பக்தர்கள் நேற்று கோவில்களுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து, தங்கள் மனபாரங்களை எல்லாம் இறக்கி வைத்தனர்.கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன், உக்கடம் நரசிம்மர், சுக்கிரவார்பேட்டை பாலமுருகன், கோட்டை ஈஸ்வரன், ஈச்சனாரி விநாயகர், புலியகுளம் முந்திவிநாயகர்,பேரூர் பட்டீசுவரர், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில்கள், நேற்று அதிகாலை திறக்கப்பட்டன.சைவ, வைணவ ஆகம விதிகளின் கீழ் சுவாமிக்கு, அதிகாலை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்புஹோமங்கள், வாஸ்துசாந்தி பூஜைகளை தொடர்ந்து, மஞ்சள், சந்தனம், பன்னீர் தெளிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க, கோவில் நடைகள் திறக்கப்பட்டன.தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு, தானியங்கி தெர்மோ ஸ்கேனர் கருவியால் உடல்வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது.
கிருமிநாசினி திரவத்தால் கைகள் சுத்தம் செய்யப்பட்டன.பூமாலை, தேங்காய், பால், பன்னீர் பொருட்கள் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தப்பட்டனர்.ஒப்பணக்காரவீதியிலுள்ள புகழ் பெற்ற அத்தார்ஜமாத் பள்ளிவாசலில், இஸ்லாமியர்கள் அரசு வகுத்துக்கொடுத்துள்ள விதிமுறைகளின் படி, சமூக இடைவெளி பின்பற்றி தொழுகை நடத்தினர். கோவை - திருச்சி சாலை அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தில், நேற்று சிறப்புத்திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் வழக்கம் போல், தங்களது வழிபாடுகளை அரசு விதிமுறைகளின் படி மேற்கொண்டனர்.அறுபது நாட்களுக்கு பிறகு ஆனந்தம்!கீதா: அறுபது நாட்களுக்குப்பின் கோனியம்மனை தரிசித்தது, மனதுக்கு நிம்மதியளிக்கிறது. இதற்காக காலை 6:30 மணிக்கு, திருப்பூரிலிருந்து கோவைக்கு கிளம்பி வந்தேன்.சரோஜா: கோனியம்மனை நினைக்கும் போதெல்லாம், வழிபட்டால் தான் எனக்கு நிம்மதி. அம்மனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் அன்றாடம் வீட்டில் நினைத்து வழிபட்டுக்கொண்டே இருப்பேன்.உஷாராணி: எப்போது கோவில் திறக்கும்; நம் நேர்த்திக்கடனை நிறைவு செய்வோம் என்று காத்திருந்தேன். தற்போது தரிசனம் கிடைத்தது திருப்தியளிக்கிறது.