பதிவு செய்த நாள்
11
ஜூலை
2021
06:07
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பெரிய சர்ச்சுகள், 500க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சர்ச், வழிபாட்டு கூடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் பிரார்த்தனைக்கு, மக்களை அனுமதிக்கவில்லை. தற்போது தளர்வால் கடந்த, 5ம் தேதி முதல், அனைத்து மத ஆலயங்களிலும் வழிபாடு துவங்கியது. ஆனால், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, சிறப்பு பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி, கூட்டு பிரார்த்தனையுடன் தொடங்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அனைத்து சர்ச்சுகளிலும் நேற்று தூய்மைப்பணி நடந்தது. பிரார்த்தனைக்கு வரும் வாயில்களின் எண்ணிக்கையை குறைத்து, குறைந்த எண்ணிக்கையிலானோர் சமூக இடைவெளியுடன் அமர இருக்கை தயார் செய்தனர். தெர்மல் ஸ்கேனரில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே, அனுமதி தரப்படும். இந்நிலையில் ஈரோடு பிரப் நினைவு ஆலயத்தில், கூடுதல் இருக்கைகள் அமைத்து, இருக்கையில் அமரும் வகையில் மட்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். காலை, 7:00 மணி, 9:00 மணி என இரு முறை பிரார்த்தனைக்கு திட்டமிட்டுள்ளனர். பிற சர்ச்களிலும் இன்று பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.