நம்புதாளை சிவன் கோயிலில் 13ம் நுாற்றாண்டு கல்வெட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2021 03:07
தொண்டி, : தொண்டி அருகே பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது.தொண்டி அருகே நம்புதாளை நம்புஈஸ்வரர் கோயிலில் ஒரு பாறைக்கல்லில் கல்வெட்டு உள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருஇக் கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:ஸ்வஸ்திஸ்ரீ என தொடங்கும் இக் கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசின்ஆணையாகும்.இக் கோயில் நம்புதாளையில் இருந்தாலும் கல்வெட்டில் தொண்டியான பவித்ர மாணிக்கபட்டினத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.13ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.அரசனின் ஆணைப்படி கங்கை நாராயண சக்கரவர்த்தி, வீரசிகதேவன் ஆகியோர் இக் கோயிலில் உள்ள இறைவன் குலசேகர பாண்டீஸ்வர முடையார்க்கு, உள்ளூரில் விதிக்கப்படும், அந்தராயம் விளைச்சலுக்கு தக்கவாறு அரசுக்கு செலுத்த வேண்டிய கடமை, பொதுசெலவிற்காக வினியோகம் ஆகிய வரிகளை தானமாக வழங்கியிருக்கிறார்கள்.மேலும் மடத்தை நிர்வகிப்பதற்காக சவசிவஞான தேவருக்கு இரண்டு மா அளவுள்ள நஞ்சை நிலத்தையும் இவர்கள் தானமாக கொடுத்துள்ளனர்.இதன் மூலம் சவசிவஞான தேவரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மடம் இவ் வூரில் இருந்ததை அறியமுடிகிறது. மடத்திற்கு தானமாக வழங்கிய நிலத்தை எல்லை குறிப்பிடும் போது கிழக்கில் ராரா பெருவழி குறிப்பிடப்படுகிறது.இது ராஜராஜசோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை பெருவழியாகும். தற்போது நம்புஈஸ்வரர் கோயில் இறைவன் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் குலசேகரபாண்டிய ஈஸ்வர முடையார் எனப்படுகிறார் என்றார்.