பதிவு செய்த நாள்
17
ஜூலை
2021
01:07
சென்னை: ஆடி 1 பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் பெண்கள் அலைஅலையாய் குவிந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் அனைத்து ஸ்தலங்களிலும் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் பரவி நிற்கும். சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். காவடி எடுத்தல், தீமிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று ஊரே அமர்க்களப்படும் படவேடு ரேணுகாம்பாள், திருவேற்காடு கருமாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், மதுரை மடப்புரம் காளியம்மன், தெப்பக்குளம் மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் போன்ற பல திருத்தலங்களில் திருவிழாக்கள் அரங்கேறும்.
அம்மன் கோயில்களில் பெண்கள் வழிபாடு: ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் அம்மன் காட்டுவாள். அதை பெற இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று (ஜூலை 17) பெண்கள் குவிந்து விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
காவிரி படித்துறையில் பரிகார பூஜை: ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் காவிரி, பவானி மற்றும் கண்ணிற்கு புலப்படாத அமுதநதி ஒன்று ஓரே இடத்தில் சங்கமிப்பததால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆடி மாதம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தர்ப்பணம் உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்ய இந்து அறநிலையத்துறையின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடி 1ம் தேதி இன்று வழக்கத்திற்கு மாறாக தடை உள்ளதால் கோயிலுக்கு குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே வந்திருந்தனர். காவிரி படித்துறை அருகே ஐயப்பன் மண்டபம் அருகே ஒரு சில பக்தர்கள் தங்களுது முதாதையர்களுக்கு திதி தர்பணம் கொடுத்து விட்டு அந்த பிண்டத்தை காவிரி ஆற்றில் கரைத்தனர். இன்னும் சிலர் வந்து குளித்து விட்டு படிதுறை அருகே இருந்த விநாயகர், ராகு கோது சாமிகளை வழிபட்டு சென்றனர். இதே போல் கோயிலின் உள்ளேயும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற படி, சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகியை வழிபட்டுவிட்டு சென்றனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாவானி போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.