பக்தர் கனவில் தோன்றிய மகாகாளியம்மன்: சிலையாக பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 01:07
மயிலாடுதுறை : கொள்ளிடம் அருகே கோதண்ட புரம் கிராமத்தில் பக்தர் கனவில் தோன்றியதால் கல்லாக வழிபட்டு வந்த மகாகாளியம்மன், சிலையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்ட புரம் கிராமத்தில் தெருவோரத்தில் 5 செங்கல் வரிசையாக வைத்து பல வருடங்களாக மகாகாளியம்மன் என்ற பெயரில் கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த காளியம்மனை தீவிரமாக வழிபட்டு வந்த பக்தர் அதே கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் கனவில் பெண் உருவில் தோன்றி நான்தான் காளி எனக்கு சிலை வைத்து வழிபடுமாறு கூறி மறைந்து விட்டாளாம். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு பிறகு மீண்டும் அதே பக்தரின் கனவில் மீண்டும் இரண்டு முறை தோன்றி எனக்கு சிலை செய்து வழிபடுமாறு கூறிவிட்டு மறைந்து விட்டாளாம். இந்த தகவலை அந்த ஆட்டோ டிரைவர் கிராம மக்களிடம் எடுத்து கூறியதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கோதண்ட புரம் தெருவில் புதியதாக 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மகாகாளியம்மன் சிலை செய்து தகரத்தால் ஆன மேற்கூரை அமைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த காளி சிலையின் கால் பகுதியில் காலை 9 மணி அளவில் ஒரு பெரிய நல்ல பாம்பு படமெடத்து ஆடி கொண்டிருந்தபோது,அங்குள்ள கிராம மக்கள் ஆச்சரியத்துடன் அதனை பார்த்து அதனை அடிக்க கூடாது என்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிட நேரங்களில் சிலையின் கால் பகுதியில் படமெடுத்த நல்ல பாம்பு பக்கத்தில் ஓடி மறைந்து விட்டது என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த காளி சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு கும்பாபிஷேக விழா எளிய முறையில் நடைபெற்றது. விழாவில் சம்பந்தகுருக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை செய்து வைத்தார்.கிராம மக்கள் சார்பில் விழா குழுவைச் சேர்ந்த ஆசிரியர் சங்கர்,பழனியப்பன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தரின் கனவில் காளி தோன்றியதால் கிராம மக்கள் கல்லாக வழிபட்டு வந்த காளி தற்போது சிலையாக கிராமத்தில் அருள்பாலித்து வருகிறார். பக்தரின் கனவில் காளி தோன்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.