பதிவு செய்த நாள்
18
ஜூலை
2021
10:07
சபரிமலை: ஐந்து மாத இடைவெளிக்கு பின், சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். படி பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடந்தன.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கொரோனா பரவல் காரணமாக ஐந்து மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஆடி மாத பூஜையில் நேற்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் நடை திறந்து விளக்கேற்றினார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைத்தார். கணபதி ஹோமம், 7:30 மணிக்கு, உஷ பூஜை, 12:00 மணிக்கு நடந்தன. தொடர்ந்து உச்ச பூஜைகள் நடந்து நடை அடைக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6:30 மணிக்கு தீபாராதனையும், 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின், 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஜூலை 21 வரை நடை திறந்திருக்கும். நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் பக்தர்களை விட்டுச் சென்ற பின், வாகனங்கள் நிலக்கல் திரும்பி விட வேண்டும். தரிசனம் முடிந்த பின், பக்தர்களை வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.