வீர வசந்தராய மண்டப சீரமைப்பு ; திட்ட அறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2021 10:07
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபத்தை சீரமைக்க கற்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், பணிகளுக்கான செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய திட்ட அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இக்கோவிலில் கடந்த 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது. கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள களரம்பள்ளி மலையடிவாரப்பகுதியான பட்டிணம் கிராம குவாரியில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மதுரை கொண்டு வரப்பட்டு, கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டு உள்ளன. திட்ட அறிக்கை விபரம் : பட்டிணம் கிராமத்தில் கல் குவாரியில் இருந்து கற்களை வெட்டி எடுக்க அரசின் கனிமவளத்துறைக்கு கோவில் நிதி ரூ.ஒரு கோடி செலுத்தப்பட்டது. கருங்கற்களை பாறைப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து கோவில் வசம் வழங்க ரூ.3.30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான செலவை அன்னை கிரானைட்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. குவாரியில் இருந்து செங்குளம் பண்ணைக்கு கற்களை எடுத்து வர கோவில் நிதி ரூ.2.10 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருங்கற்கள் வடிவமைத்து துாண்கள் உள்ளிட்ட வைகளை உருவாக்க ரூ.11.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்களை வடிவமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.