பதிவு செய்த நாள்
03
ஆக
2021
04:08
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பக்தர்களின்றி ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வழக்கமாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையன்று, வள்ளி தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி, பால் குடங்களை எடுத்து வருவார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆக., 1 முதல் 3ம் தேதி மற்றும் 8ம் தேதியும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆடிக்கிருத்திகை தினமான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி தங்க கவசங்களுடன் காட்சியளித்தார். பக்தர்களின்றி, கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு கேட்டில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இன்று, ஆடிப்பெருக்கு தினத்தன்றும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறையில் தர்ப்பனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.