கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில் உள்ளது. 12ம் நுாற்றாண்டை சேர்ந்த குடைவரை கோவிலாகும். திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள், தான்தோன்றிமலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது, கோவிலின் தனி சிறப்பு. கடந்த, 2014ல், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம் மேற்கொள்ள கடந்த ஆக., 27ல் பாலாலயம் நடந்தது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், கடந்த, 24ல் மஹா பூர்ணாஹூதி-யுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன் தினம் காலை, ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று, இரண்டாம் காலம், மூன்றாம் காலம் யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி செய்யப்பட்டு கும்ப புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா உள்பட பலர் செய்திருந்தனர்.