பதிவு செய்த நாள்
05
ஆக
2021
03:08
திருப்பூர் : திருப்பூர் மேற்கு ரோட்டரி சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சாமளாபுரம் குளத்தில், நம்ம குளம் திருவிழா நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட எல்லையான சாமளாபுரம் குளத்தில், ஆடிப்பெருக்கு நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் விழா துவங்கியது. குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள ஒரு தீவு பகுதியில், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மரக்கன்று நட்டனர். மற்றொரு தீவில், வனம் அமைப்பினர் மரக்கன்றுகள் நட்டனர். கொடுமுடி ஸ்ரீஉத்தமி சமேத தான்தோன்றீஸ்வர் கோவில் சிவாச்சாரியார் ராஜபாலசந்திர கணபதி தலைமையிலான குழுவினர், ஸ்ரீவருண பகவான் பூஜை யாகம், ஸ்ரீருத்ர யாக பூஜைகளை நடத்தினர். சிவாச்சாரியர்கள், தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து, வருண ஜபம் மேற்கொண்டனர். மேற்கு ரோட்டரி தலைவர் ரகுபதி, ரோட்டரி நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ரோட்டரி கவர்னர் சண்முகசுந்தரம், ராம்ராஜ் காட்டன் நாகராஜ், உ.உ.க., தலைவர் செல்லமுத்து உட்பட பலர், ராஜவாய்க்காலில் இருந்து குளத்துக்கு வந்த நீரை, மலர்துாவி வரவேற்றனர். கொரோனா மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.