செம்பட்டி : எஸ்.புதுக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இங்குள்ள கருப்பணசாமி கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை தொடர்ந்து 2 நாட்கள் திருவிழா நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக விளக்குகளை அணைத்து நள்ளிரவு பூஜை நடக்கும். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் பூஜாரி வீட்டிலிருந்து பண்டாரப்பெட்டி அழைப்புடன் துவங்கியது.பக்தர்கள் பொங்கல் வைத்தல், ஆடு பலியிடல் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நள்ளிரவு ஒரு மணிக்கு கிராமத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் கோயிலில் கூடினர்.வாய்கட்டுடன் பங்கேற்ற பூஜாரிகள் சுவாமிக்கு நள்ளிரவு பூஜை நடத்தினர். அதிகாலை வரை சிறப்பு அபிஷேக, ஆராதனை தொடர்ந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 120 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இவ்விழா நடப்பதாக தெரிவித்தனர்.