லாகூர்- பாகிஸ்தானில் ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாக்.,ன் பஞ்சாப் மாகாணம் போங்க் நகரில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். சமீபத்தில் ஒரு கும்பல், போங் நகரில் உள்ள பிள்ளையார் கோவிலை சூறையாடி தீ வைத்தது. கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று இந்த வன்முறை தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கிஉள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.