பதிவு செய்த நாள்
08
ஆக
2021
12:08
சென்னை:ஆடி அமாவாசை தினமான இன்றும், ஆடிப் பூரத்தை ஒட்டி வரும் 11ம் தேதியும், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோவில்களும், பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படாது என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் கொரோனா தொற்று பரவல் குறையத் துவங்கியதை தொடர்ந்து, ஜூலை 5 முதல், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இரு வாரமாக நோய் தொற்று பரவல் மீண்டும் லேசாக அதிகரிக்கத் துவங்கியது. அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடினால், அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், காவல் துறையினர் எடுக்கலாம் என, தமிழக அரசு கடந்த 30ம் தேதி அனுமதி வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய கடை வீதிகள் மற்றும் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இம்மாதம் 2ம் தேதி ஆடிக் கிருத்திகை, 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டன. அன்றைய தினம் கோவில்களில் பக்தர்கள் குவிவதை தடுக்க, பெரும்பாலான மாவட்டங்களில், 2, 3ம் தேதிகளில் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது.
வழிபாட்டிற்கு தடை: வழிபாட்டு தலங்களில் மக்கள் அதிகம் குவிவது, நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தும் என்பதால், விழாக்கால நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், விடுமுறை நாட்களிலும் பிரபல கோவில்களுக்கு மக்கள் அதிகம் வருகின்றனர். இதைத் தடுக்க, அடுத்த வாரத்தில் இருந்து, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முதல்வரின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரம், இன்று ஆடி அமாவாசை. அதையொட்டி தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக, கோவில் குளங்களில் பக்தர்கள் குவிவர். தர்ப்பணம் முடித்ததும், கோவில்களில் வழிபாடு நடத்துவர். எனவே, இன்றும் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு அறிக்கை:ஆடி மாதத்தில், கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் நாட்கள் அதிகம். சமீப காலமாக, கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பூஜைகள் நடைபெறும்: அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், நாளை முதல், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை, 11ம் தேதி ஆடிப் பூரம் வர உள்ளது. இவ்விரு நாட்களிலும், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதை தவிர்க்க, குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ஆகம விதிகளின்படி கோவில்களில் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.