பதிவு செய்த நாள்
09
ஆக
2021
03:08
பவானி: கொரோனா தடையால், ஆடி அமாவாசை வழிபாடு, கூடுதுறையில் நேற்று களை கட்டவில்லை. ஆனால், காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில், ஏராளமானோர் வழிபாடு நடத்தினர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடி அமாவாசை நாளான நேற்று, தமிழகம் முழுவதும், நதி, கடல், ஆறுகளில் புனித நீராட, கோவில்களில் வழிபட, தடை விதிக்கப்பட்டது.இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை வழிபாடு களை இழந்தது. பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்நாளில் திதி, தர்ப்பணம் செய்து வழிபடுவர். ஆனால், கொரோனா தடையால், சங்கமேஸ்வரர் கோவில் அடைக்கப்பட்டது. கூடுதுறைக்கு செல்லும் வழிகள், பேரிகார்டு வைத்து தடுக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் சிலர், காளிங்கராயன் வாய்க்காலில் குளித்துவிட்டு, தர்ப்பணம் கொடுத்து, பிண்டத்தை வாய்க்காலில் விட்டுச்சென்றனர். இதற்காக புரோகிதர்கள், காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில், நேற்று காத்திருந்தனர். ஆளுக்கு தகுந்தபடி வசூலித்துக் கொண்டு, சடங்குகளை செய்தனர். ஒரு சில இடங்களில் கூட்டம் கூடியது. சித்தோடு போலீசார் சென்று, எச்சரித்து அனுப்பினர்.