பதிவு செய்த நாள்
22
ஜூன்
2012
12:06
95வது படலத்தில் தங்க விருஷபதான முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ஆயிரம், ஐநூறு, இருநூத்தி ஐம்பது, நூற்றி இருபத்தி ஐந்து, நூறு இந்த அளவுள்ள நிஷ்கம் என்ற அளவு முறையில். தங்கத்தால் விருஷபம் செய்து அதன் நெற்றியில் ஸ்படிகத்தினால் அர்த்தசந்திராகாரமான ஆபரணமும் வெள்ளியால் குளம்பும், பத்மராக கல்லால் காதும், கோமேதக கல்லால் திமிழும், கழுத்தில் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட கண்டாமாலையும் செய்யவும். வேறு விருப்பத்திற்கு அங்கமாக சலங்கையும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதாக அமைத்து மண்டலம், அதன் மத்தியில் விருஷபரை மேற்கு முகமாக ஸ்தாபிக்கவும். விருஷப காயத்திரியால் பூஜிக்கவும் துலாரோகன விதியில் கூறப்பட்டுள்ளபடி சிவபூஜை ஹோமம் செய்யவும். பிறகு அங்கு பூஜித்த விருஷபரை சிவனுக்கும் சிவபக்தர்களுக்கும் கொடுக்கவும். பிறகு சமித்து, ஆஜ்ய, ஹவிஸ்சுடன், கூடி சாந்தி ஹோமமோ செய்யவும் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத கர்மாவை துலாபார முறைப்படி தேசிகன் அனுஷ்டிக்கவும் என்று தங்க விருஷப தான முறையில் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 95வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. தங்கத்தால் செய்யப்பட்ட வ்ருஷபத்தின் தானம் இப்பொழுது சுருக்கமாக சொல்லப்படுகிறது. ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ ஆயிரம் நிஷ்கத்தாலோ அல்லது அதில் பாதியோ (ஐநூறு)
2. அதில் பாதி இருநூற்றி ஐம்பதோ அதில் பாதி நூற்றி இருபத்தி ஐந்தோ அல்லது நூற்றி எட்டு ஸ்வர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய வ்ருஷபத்தை நிர்மாணிக்க வேண்டும்.
3. நெற்றியில் ஸ்படிகத்தால் அஷ்டமீ சந்திரன் போன்ற ஒளி உள்ளதும் வெள்ளியால் ஆன குளம்பையும் பத்மராகத்தால் காதுகளிலும், தோள்பாகம் கோமேதகத்தாலும்
4. கழுத்தில் மணிகளின் மாலையையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும் சலங்கை மாலைகளுடன் கூடியதாகவும் வ்ருஷபத்தின் அவயவங்களை நிர்மாணிக்க வேண்டும்.
5. முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் மண்டபம் அமைத்து அதன் நடுவில் மேற்கு முகமாக வ்ருஷபத்தை வைக்க வேண்டும்.
6. வ்ருஷபத்தை காயத்ரி மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்ருஷபத்தின் மேலே பரமேஸ்வரனை வைத்து முன்பு போல் சிவபூஜையையும் விசேஷமாக ஹோமத்தையும் செய்ய வேண்டும்.
7. ஆசார்யன் ஸமித்து, நெய், ஹவிஸ் இவற்றுடன் சாந்தி ஹோமத்தையோ செய்ய வேண்டும். மிகப் பெரியதான வ்ருஷபத்தை சிவனின் பொருட்டு சிவ பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
8. இங்கு எது சொல்லப்படாமல் விடப்பட்டதோ அதை துலாபாரத்தில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தங்க வ்ருஷப தானம் செய்யும் முறையாகிய தொன்னூற்றைந்தாவது படலமாகும்.