மதுரை:மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த அருணகிரிநாதர், 77, இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து சர்ச்சையில் சிக்கினார். அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். கடந்த 2019ல், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தி தம்பிரானை இளைய ஆதீனமாக அறிவித்து, ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் சூட்டினார். தொடர்ந்து சுவாச பிரச்னையால் அவதிப்பட்ட மதுரை ஆதீனம், மதுரை தனியார் மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று (ஆக., 12) தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தங்கி இருந்த அறைக்கு தர்மபுரி ஆதீனம் பூட்டி சீல் வைத்தார், வழக்கமாக ஆதீனம் நீண்ட காலம் மடத்திற்கு வராமல் இருந்தால் அவரது அறைக்கு சீல் வைப்பது வழக்கம். தற்போது ஆதீனத்திற்கு உடல் நலம் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆதினம் நலம்பெற வேண்டி நித்தியானந்தா பிரார்த்தனை செய்து வருகிறார்.