பதிவு செய்த நாள்
13
ஆக
2021
04:08
திருவண்ணாமலை: காட்டுவாநத்தம் கிராமத்தில், 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து ஐயனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த, காட்டுவாநத்தம் கிராமத்தில் ஏரிக்கரையோரம், ஐயனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் வேடியப்பன் சுவாமி என வழிபட்டனர். இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் ராஜ்பன்னீர்செல்வம், வினோத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: மூன்றரை அடி உயரம், மூன்றரை அடி அகலம் கொண்ட கற்பலகையில், ஐயனார் சிலை இருப்பது கண்டறியப்பட்டது. வட்ட முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் அணிந்து தடித்த உதட்டுடன் சுகாசன கோலத்தில், இடது காலை பீடத்தில் அமர்த்தியும், வலது காலை கீழே தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். வலது கையில் கடக முத்திரையில் செண்டை ஆயுதமாகவும், இடது கையை தனது தொடையின் மீது வைத்தும் காட்சி தருகிறார். கழுத்தில் கண்டிகை, சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நுாலும், கைகளில் கைவளையும் அணிந்து காட்சி தருகிறார். இவரின் மனைவிகளான பூர்ணா, புஷ்பகலா வலமும், இடமும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். ஐயனாரின் பாதம் அருகே, வேடன் ஒருவன் வேட்டையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. நீண்ட தாடியுடன், தொடை வரை உடை அணிந்த வேடன் ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பும் ஏந்தி நிற்க, வேட்டை நாய் ஒன்று இரு மான்களை துரத்துவது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு மான் பயந்து ஓட, மற்றொரு மான் நாயின் வாயில் அகப்பட்டு அதன் தலை மட்டும் திரும்பிய நிலையில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐயனாரின் வாகனமான யானை, இடப்பக்க தோள் அருகே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்துக்குரியது. இந்த இடத்திற்கு அருகே புதருக்குள், 9-ம் நுாற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இது நான்கு அடி உயரமுள்ள சிலை. வழிபாடின்றி கைவிடப்பட்டுள்ளது. மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.