இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2021 05:08
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெரும் திருவிழா நடைபெறும். தென் தமிழகத்தில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தி பொங்கலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை இருக்கன்குடியில் பெரும் திருவிழா நடைபெறும் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைவார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கொரோனா பெருந் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவித்தார்.
சென்ற ஆண்டு போல உற்சவ அம்மனுக்கு காலை 9 மணி முதல் ஒரு மணி வரை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இது சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணியளவில் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது . யாகசாலை பூஜை நடைபெற்றது . இளநீர், பன்னீர் திருமஞ்சனம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இது யூடிப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் குழு பூஜாரிகள், செயல் அலுவலர் கருணாகரன், ஏற்பாடுகளை செய்திருந்தனர். தடையை மீறி கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர் சாத்துார் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.