பதிவு செய்த நாள்
14
ஆக
2021
11:08
மதுரை: மதுரை ஆதீனம் ஞானசம்பந்த அருணகிரிநாதர், நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமானார்.மதுரை ஆதீனம் ஞானசம்பந்த அருணகிரிநாதர், 77. சில ஆண்டுகளாகவே, நுரையீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த ஆதீனத்திற்கு, ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்தது. மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.ஆதீனம் அருணகிரிநாதரின் உடல், ஆதீன மடத்திற்கு எடுத்து வரப்பட்டு, இன்று இறுதி சடங்குகள் நடக்க உள்ளன. அவரது மறைவுக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சைவ ஆதீனங்களில் தொன்மையானது மதுரை ஆதீனம். இவ் ஆதீனத்தின் 292வது குரு மகா சன்னிதானமாக அருள் ஆட்சி செய்தவர் அருணகிரிஞான சம்பந்த தேசிக சுவாமிகள். சீர்காழியில் பிறந்த இவர் பள்ளி படிப்பு முடிந்தவுடன் பத்திரிக்கையாளராக சிறிது காலம் பணியாற்றினார் தொடர்ந்து தருமை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்து 1975 மே 27ம் தேதி மதுரை ஆதீன இளைய குருமகா சன்னிதானமாக பட்டம் ஏற்று, தொடர்ந்து 1980ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி 292வது குரு மகா சன்னிதானமாக பட்டம் பெற்றார்.
இவர் தமது பேச்சாற்றல், எழுத்தாற்றல், சைவசித்தாந்த புலமையால் அனைவரையும் கவர்ந்தது. இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் தினமும் நன்கு நட்புறவு கொண்டிருந்தார். அரசியலில மிகுந்த ஈடுபாடு கொண்டு தொடர்ந்து பல்வேறு சமயங்களில் அதனை வெளிப்படுத்தி வந்தார். அரசியல் பிரச்சார மேடைகளிலும் பேசியுள்ளார். பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்றும் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துரைத்த பெருமை இவருக்கு உண்டு. ஆங்கில மொழியிலும் சரளமாக பேசும் வல்லமையால் சைவசமய சித்தாந்தக் கருத்துக்களை வெளிநாடுகளிலும் பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
சமீபகாலமாக இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. கடந்த 8ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பரிந்துரை அளித்ததன் பேரில் நேற்று முன்தினம் 12ஆம் தேதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது இந்நிலையில் நேற்று இரவு ஒன்பது பத்து மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிபூரணம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த 2019 ஜூன் 7ம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானாக இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின் இளைய குருமகா சன்னிதானமாக பட்டம் ஏற்றி அவருக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் என நாமகரணம் சூட்டி இருந்தார். சைவ மடங்களின் வழக்கப்படி இளைய குருமகா சன்னிதானமாக முறைப்படி பட்டம் ஏற்றவர் அடுத்த குரு மகா சன்னிதானமாக பீடம் ஏற்பது நடைமுறை.