சபரிமலையில் நடை திறப்பு: தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2021 12:08
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஆவணி மாத பூஜை, நிறை புத்தரிசி பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக நேற்று (ஆக., 15) மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஆனால் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்து உள்ளதாவது: இந்த மாதம் 23ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜையையொட்டி ஓணம் பண்டிகையும் 21ம் தேதி சேர்ந்து வருவதால் 8 நாட்கள் தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள், வழிபாடு நடைபெற உள்ளது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், தரிசனத்திற்கு 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.