பதிவு செய்த நாள்
18
ஆக
2021
07:08
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடலுாரைச் சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி, அர்ஜுனன் இளையராஜா ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த, அரசு எந்த அக்கறையையும் காட்டுவதில்லை.ஹிந்துக்கள் வழிபடும் கோவில்களை கட்டுப்படுத்த மட்டும், ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தைக் கொண்டு வந்தது.
ஹிந்து கோவில்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும், அறநிலையத் துறை சட்டம் கொண்டு வந்த நோக்கம் மாறி, கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றனர்.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கோவில்கள் இருந்தாலும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.மதச்சார்பற்ற நாடு என்று சொல்லும்போது, ஹிந்து மதக் கோவில்கள் மீது மட்டும், ஆதிக்கம் செலுத்துவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. அறநிலையத் துறை சட்டம் வாயிலாக, கோவில்களை நிர்வகிப்பதில் எவ்வித தடையும் இல்லை; ஆனால் கோவில்களை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரானைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர், அரசு தரப்பில்பி.முத்துக்குமார் ஆஜராகினர்.வழக்கு குறித்த ஆவணங்களை, அரசு தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.