பதிவு செய்த நாள்
27
ஆக
2021
03:08
பெங்களூரு:கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கொண்டாட்டத்திற்காக, பெங்களூரின், இஸ்கான் உட்பட, பல்வேறு கோவில்கள் தயாராகின்றன.
ஆகஸ்ட் 30ல், கிருஷ்ண ஜென்மாஷ்டமி வருகிறது. இதற்காக பெங்களூரின் இஸ்கான் உட்பட, பல்வேறு கோவில்கள் தயாராகி வருகின்றன. முந்தைய ஆண்டு கொரோனாவால், எளிமையாக பண்டிகை கொண்டாடப்பட்டது. இம்முறையும் அதே போன்று கொண்டாடவே வாய்ப்புள்ளது.வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் உள்ள இஸ்கான் ராதா கிருஷ்ணர் கோவிலில், வரும் 29 மற்றும் 30ல் கிருஷ்ணாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் பூஜைகளில், பக்தர்களுக்கு பங்கேற்க வாய்ப்பிருக்காது. அன்றைய தினம் நடக்கும் பூஜை, நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலம் காண, வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாள், பக்தர்களின் தரிசனத்துக்கு வாய்ப்பளிக்கப்படும். பிரசாதம்காலை ராதா கிருஷ்ணருக்கு பழங்கள், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகம், புஷ்ப யாகம் நடக்கும். அதன்பின் ஊஞ்சல் சேவை, சயன ஆரத்தி நடக்கும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இஸ்கான் கோவிலின் பொது தொடர்பு அதிகாரி குலசேகர சைதன்ய தாஸ் கூறியதாவது: ஆகஸ்ட் 30ல் வழக்கம் போன்று, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் இருக்கும். உறியடி நிகழ்ச்சியும் நடக்கும். இரவு 11:00 மணிக்கு மஹாபிஷேகம் நடக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.ஆகஸ்ட் 31 மாலை, ஸ்ரீல பிரபுபாதரின் 125வது ஜெயந்தியைமுன்னிட்டு, 800 முதல் 900 இனிப்பு பண்டங்கள் தயாரித்து, நைவேத்தியம் படைக்கப்படும். முதலில் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் சமர்ப்பித்த பின், ஸ்ரீலபிரபுபாதருக்கு நைவேத்தியம் செய்யப்படும். இந்த பண்டங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். *அஜ்ஜனஹள்ளி 2வது ஸ்டேஜின் ஆனந்த கோவிந்தர் கோவில், மல்லேஸ்வரத்தின் வேணுகோபால சுவாமி, பசவனகுடியின் புத்திகே மடத்தின் கோவர்த்தன கிரி குஹாலயா உட்பட அனைத்து பல கோவில்களில் கிருஷ்ணாஷ்டமி அலங்காரம் நடந்து வருகிறது.