பதிவு செய்த நாள்
31
ஆக
2021
09:08
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், விழா கொண்டாடவும் அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசு அறிவிப்பு விபரம்: தற்போதுள்ள கொரோனா பரவல் சூழல் காரணமாக, சமய விழாக்களை முன்னிட்டு, மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும் அல்லது விழா கொண்டாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி இல்லை
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்கள் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று, அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி உண்டு
சென்னையை பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக, சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில், இச்செயல்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது, முழுதுமாக தடை செய்யப்படுகிறது
தனி நபர்கள், தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலோ; சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்ற, ஹிந்து சமய அறநிலைய துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விழாவிற்கான பொருட்கள் வாங்க, கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொது மக்கள், முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சென்னை வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்பட உள்ள, மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது. இவ்வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும், அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.