பதிவு செய்த நாள்
31
ஆக
2021
09:08
சென்னை: உலக நன்மைக்காகவும், ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமங்கள், சென்னையில் சங்கராலயத்தில் நேற்று நடந்தன.ஹிந்து கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து போதித்து வருகிறது, சுதேசி பத்திரிகை. இதன் சார்பில், நாட்டில் பரவியுள்ள நோயினை அகற்றவும்; பொருளாதார தேக்கத்தில் இருந்து மீண்டு வரவும்; ஹிந்து சமயத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகளில் இருந்து விடுபடவும், சத்ரு சம்ஹார லோக க்ஷேம ஹோமங்கள் நடத்தப்பட்டன.
சென்னை சேத்துப்பட்டு, சங்கரமட சங்கராலயத்தில், நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்று, சங்கல்பம் செய்து கொண்டார். ஆன்மிக பேச்சாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாவது:நம் தேசத்தின் தற்பேதைய நிலைமை மாற வேண்டும். நம்மை என்னென்ன துன்பங்கள் சூழ்ந்துள்ளன; அவை யாரால் ஏற்படுகின்றன என்பதை அறிந்து, அவற்றுக்கு பரிகாரம் தேட வேண்டும்.பகவான் கிருஷ்ண பரமாத்மா, தர்மத்தை காப்பாற்ற, நான் வருவேன் என்று கூறியுள்ளார். அவர் வரும் வரை காத்திருக்கக் கூடாது. முயற்சிக்காமல் பகவான் வருவார் என, நாமும் கைகட்டி நின்றால் அழிந்து போவோம்.காஷ்மீர் முதல் குமரி வரை, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை, வல்லபாய் பட்டேலை சாரும். கட்சிகளுக்கு தேசத்தை பற்றி அக்கறை இல்லை.
நம் யாருக்கும் கட்சி உணர்வே இருக்கக் கூடாது; தேசிய பற்று மட்டுமே இருக்க வேண்டும்.இவர்களை வைத்து, தேசம் முன்னேறுவது கஷ்டம். நாட்டின் எதிர்காலம் குறித்து யோசிக்கவே, இந்த சத்ரு சம்ஹார ஹோமம் நடத்தப்படுகிறது.சுப்பிரமணிய சுவாமி அசுரர்களை அழித்தது போல, நாட்டை அழிப்பவர்களிடம் இருந்து காப்பது தான் இந்த யாகம், ஹோமம். அக்னி வளர்த்து யாகம் செய்வதால், நம் வேண்டுதல் நேரடியாக கடவுளை சேரும்.இவ்வாறு அவர் பேசினார்.ஹோமத்திற்கான ஏற்பாடுகளை, சுதேசி பத்திரிகை நிறுவனரும், நிர்வாக ஆசிரியருமான பத்மினி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.