சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2021 07:09
சோளிங்கர்: கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தும் திட்டம் சோளிங்கர் லட்சமி நரசிம்மர் கோவிலில் அமலுக்கு வந்தது. அனைத்து கோவில்களிலும் கட்டணமில்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். 108 திவ்ய வைணவ தலங்களின் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
இது குறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது: 750 அடி உயரத்தில் 1,305 படிகட்டுக்கள் கொண்ட ஒரே குன்றில் அமைந்துள்ள பெரிய மலைக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதன் அருகில் உள்ள சன்னதியில் அமிர்த்தவல்லி தாயார் அருள் பாவிக்கிறார். சிறிய மலையின் மீது 406 படிகட்டுக்களை கொண்ட யோக ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்திருக்கிறார். தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது அரசு உத்தரவுபடி மலைக்கு செல்வதற்கு முன்பு தட்டாங்குளத்தில் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் கட்டணமில்லாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து மொட்டை அடிக்கப்படுகின்றது. முதல் நாளில் 1,200 பேருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இதனால் அதிகளவு பக்தர்கள் மகிழ்ச்சியோடு சுவாமிக்கு முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.