16ம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம்; அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2021 05:09
சிவகங்கை : சிவகங்கை முத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட 16ம் நுாற்றாண்டு நவகண்ட சிற்பம் சிவகங்கை அருங்காட்சியகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் சிவகங்கை தொல்நடைகுழுவினர் ஒப்படைத்தனர். 400 ஆண்டு பழமையான நவகண்டம் சிற்பம் தொல்நடைக்குழுவால் கண்டறியப்பட்டது. நவகண்டம் என்பது உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு உயிர்பலியிடுவதாகும். அரசர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொற்றவை முன்பு உயிர் பலி கொடுப்பதாகும்.
நவகண்டம் சிலை மூன்றரை அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமுடி கொண்டையாகவும், சிறிய மூன்று கற்றைகளும் காட்டப்பட்டுள்ளன. முகத்தில் மீசை கழுத்தில் வேலைப்பாடுடன் கூடிய ஆபரணம், மேலாடை தொங்குவது போல் காட்டப்படட்டுள்ளது. இடையில் உறையுடன் கூடிய குத்துவாள் காணப்படுகிறது. ஒரு கை வில்லுடனும், மற்றொரு கை சிதைந்தும் உள்ளது. இச்சிலையை கல்லுாரி சாலையை சேர்ந்த சங்கையா தொல்நடைக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவகங்கை அருங்காட்சியகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கரிசாமி, சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராஜா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஆலோசகர் கண்ணப்பன்,செயற்குழு உறுப்பினர்கள் ஓவியர் முத்துக்கிருஷ்ணன், ராஜாராவணன், சேதுபதி, சரவணமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.