பதிவு செய்த நாள்
14
செப்
2021
05:09
இடைப்பாடி: கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில் கீழே விழும் நிலையில் கொடிமரம் உள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கல்வடங்கத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெறற கோவில்களில் ஒன்று. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்காளம்மனை குலதெய்வமாக வணங்கும் பெரும்பாலானவர்கள், கல்வடங்கம் வந்து, அங்காளம்மனை தரிசித்து செல்வதுண்டு.
அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் அதிகளவில் மக்கள் வருவர். அன்னதான திட்டம் மூலம், 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அங்காளம்மன் தேரோட்டம், ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.
அங்காளம்மன் கோவில் உட்புறம் சுவாமி சன்னதி எதிரே, பித்தளையால் வைக்கப்பட்ட, 15 அடி உயர கொடிமரம் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கொடி மரத்தின் அடிப்பாகம் உடைந்து, கோவில் மண்டபத்தை ஒட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் சாயாமல் இருக்க மூங்கில்களை கொண்டு ஆறு மாதங்களுக்கு முன் சாரம் அமைக்கப்பட்டது. இப்போது அந்த சாரமும், கொடிமரத்துடன் சேர்ந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இது குறித்து பக்தர்கள், பலமுறை ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில், கீழே விழும் நிலையில் உள்ள கொடி மரத்தை சீரமைக்க வேண்டும்.