பதிவு செய்த நாள்
22
செப்
2021
12:09
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொடுமுடி - நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில், அஞ்சூரில் முட்புதர்களுக்கு இடையே கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு சிற்பங்கள் மீட்கப்பட்டன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:
கொங்கு மண்டலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிற்பங்கள் உள்ளன. கொற்றவை கோவிலுக்கு அருகில் கண்டறியப்பட்டதால், துவாரபாலகி சிற்பமாக இருக்கலாம்.150 செ.மீ., உயரம் - 45 செ.மீ., அகலம், 120 செ.மீ., உயரம் - 60 செ.மீ., அகலத்தில் சிற்பங்கள் உள்ளன. காதில் குழைவகை காதணி, கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி வகை அணிகலனும், கையில் கடகவளை, சூடகமும் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றன் கூறியதாவது:தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவை. ஐந்து அல்லது ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வாறு அவர் கூறினார்.