10ம் நுாற்றாண்டு சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2021 03:09
பண்ருட்டி: பண்ருட்டி அருகே 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், பாரதிதாசன் பல்கலை முதுகலை வரலாறு ஆய்வு மாணவர் குமரகுரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் சுற்றுச் சுவரின் வெளிப்புறத்தில் கால்கள் இரண்டும், மண்ணில் புதைந்த நிலையில் 5 அடி உயர விஷ்ணு சிலையை கண்டுபிடித்தனர்.
தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: இந்த விஷ்ணு சிலை 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்தது.நின்ற நிலையில் உள்ள சிலையில் நான்கு கைகளில், வலதுபுற இரு கைகள் உடைந்துள்ளன. தலையில் மணிமுடி அணிந்துள்ளார். காதுகள் இரண்டிலும்காதணியாக மகர குண்டலம், கழுத்தில் வனமாலை, வைஜெயந்தி மாலை என, இரு மாலைகள் உள்ளன.இடது கைகள் இரண்டில் ஒரு கையில் சங்கு உள்ளது. மார்பில் பூணுால் மற்றும் இடுப்பு நுால் அணிந்துள்ளார். இடுப்பு நுால் விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோர் சிற்பங்களில் காணலாம். இடுப்பின் மேல் உதரபந்தம் என்ற அலங்கார அணிகலன் உள்ளது. இடுப்பு பகுதியில் ஆடையாக கீழ்பட்டாடையும் அணிந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.