சென்னை:பாரம்பரிய கலாசார கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நடக்க அனுமதி வழங்க வேண்டும் என அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் தலைவர் முத்துரமேஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கலந்து கொள்ளும் பாரம்பரிய கலாசார திருவிழா.இதுபோன்ற பாரம்பரிய கலாசார விழா, தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் நடக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக, இரண்டு ஆண்டுகளாக தசரா விழாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால், பாரம்பரிய கலாசார கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.இறை வழிபாட்டின் வழியாக, கொரோனா என்னும் கொடிய அரக்கனை வெல்ல முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைக்கு மதிப்பளித்தும், கலாசார கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், தசரா திருவிழா வழக்கம் போல நடக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முத்துரமேஷ் கூறியுள்ளார்.