பதிவு செய்த நாள்
01
அக்
2021
05:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
108 வைணவத் தலங்களில் ஒன்றாகவும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கோவில் ஆவணங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்த நிலங்கள் பல்வேறு தனிநபர்களின் குத்தகை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி வாயிலாக அளந்து வரைபடம் தயாரிக்கும் பணியை அரசு நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் முழுக்க 50 இடங்களில் சேட்டிலைட் ரோவர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம் பேரையூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. தென்காசி மாவட்டம் சிவகிரி ஆகிய நகரங்களில் சேட்டிலைட் மையம் அமைக்கப்பட்டு ரோவர் கருவி மூலம் தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கும் பணியில் அறநிலை துறை அலுவலர்களும், ஓய்வு பெற்ற நில அளவையர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவனின் முயற்சியால் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கண்டறியப்பட்டு அங்கு கோயில் நிலங்கள் என்பதற்கான போர்டுகள் வைக்கப்பட்டும், சர்ச்சைக்குரிய நிலங்களை கம்பி வேலி போட்டும் கோயில் நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. மேலும் மதுரை மாவட்டம் குன்னத்தூர், சோழவந்தான் அருகே தனிச்சியம் பகுதிகளில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் ஆண்டாள் கோயிலை சுற்றியுள்ள நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் கண்டறிந்து, நேற்று அதிகாரிகள் அளவீடு செய்தனர். இந்த ஆய்வில் தற்போதைய திருப்பாற்கடலின் மொத்த பரப்பளவு 9.7 ஏக்கர் என தெரியவந்துள்ளது. இவை தென்காசி ரோடு, தாலுகா அலுவலகம் செல்லும் ரோடு, நகராட்சி அலுவலகத்தின் தென்பகுதி நிலங்களாக மாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலங்களை கோவில் நிர்வாகம் மீட்டெடுத்தால், நகரின் மிகப்பெரிய குளமாக திருப்பாற்கடல் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.