திருமலையில் பிரம்மோற்சவம் வரும் 7 ம்தேதி துவக்கம்: பல்வேறு திட்டங்கள் அமலாகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2021 06:10
திருப்பதி: திருமலையில் நடைபெறும் திருவிழாக்களிலேயே பிரம்மாண்டமான விழா பிரம்மோற்சவ விழாவாகும். ஒன்பது நாட்களும் பெருமாள் விதம் விதமான வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே வாகனங்களில் சுவாமி உலா வருவது நடைபெறுகிறது.
இந்த வருடம் வருகின்ற 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவடையும் விழா கடந்த வருடம் நடந்தது போல கோவிலுக்குள் தான் நடைபெறுகிறது. ஒன்பது நாள் விழாக்களில் 11 ம் தேதி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார் அன்றைய தினம் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெருமாளுக்கு தங்க வஸ்திரம் சுமந்து வந்து சேர்ப்பித்து பெருமாளை தரிசிக்கிறார். முதல்வர் வருவதை முன்னிட்டு திருமலையில் பல்வேறு திட்டங்கள் துவக்கிவைக்கப்பட உள்ளது. பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் பாதை 25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதை பக்தர்களுக்காக திறந்துவிடப்படுகிறது.மேலும் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பசுமடம், நவீன பூந்தி தயாரிப்பு கூடம், குழந்தைகள் நல மருத்துவமனை, கன்னடம் மற்றும் இந்தி மொழி வழியான ஒலி ஒளிபரப்பு சானல், 2022 ம் ஆண்டிற்கான காலண்டர் டைரி விற்பனையும் துவக்கி வைக்கிறார்.