பதிவு செய்த நாள்
02
அக்
2021
05:10
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுதர்சன வேள்வி நடந்தது. தொடர்ந்து, உச்சிகால பூஜையில், பெருமாள், பூங்கோதை, செங்கோதை தாயார்களுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், பழைய புதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில், சின்னதடாகம், பெரியநாயக்கன் பாளையம், திருமலை நாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், செல்வபுரம் தண்டு பெருமாள் கோவில், சாமிசெட்டிபாளையம் வெங்கடரமண பெருமாள் கோவில், நாயக்கனூர், நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில், ஜோதிபுரம், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவில், சோமையனூரில் உள்ள குண்டு பெருமாள் கோவில், ஒன்னிபாளையத்தில் உள்ள கோமாளி அரங்கன் கோவில், மேல்முடி ரங்கநாதர் கோவில், அப்புலுபாளையத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில், சாமி செட்டிபாளையத்தில் உள்ள கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பஜனைகளும் நடந்தன.