கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் கோயிலில் ‘கடா’ எனப்படும் அணையாதீபம் உள்ளது. ரிக், யஜுர், சாம வேதங்களை குறிக்கும் வகையில் மூன்றடுக்கு கொண்ட இதில் பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம். ‘உலப்பன்னா’ எனப்படும் இந்த வழிபாட்டை குழந்தை இல்லாதவர்கள் செய்தால் உடனடி பலன் கிடைக்கும். இப்பகுதியில் அந்தணர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தும் ஒன்றும் பிழைக்கவில்லை. வருந்திய அந்தணர் யாத்திரை சென்று துவாரகை மன்னரான கிருஷ்ணரைச் சந்தித்தார். அப்போது அவருடன் அர்ஜூனனும் நின்றிருந்தான். “பகவானே! எனக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒன்றும் உயிருடன் இல்லை. அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு கடவுளான உமக்கு இல்லையா?” என வருந்தினார். இதைக் கேட்ட அர்ஜூனன், ‘‘அந்தணரே! உயிர்களின் பிறப்பும், இறப்பும் விதி வசத்தால் நடப்பவை. இதற்கு பகவான் கிருஷ்ணர் பொறுப்பாக மாட்டார். ஆனாலும் கிருஷ்ணரின் முன்பு நான் சபதம் செய்கிறேன். இனி பிறக்கும் குழந்தை காப்பது என் கடமை. ஒருவேளை குழந்தை இறந்தால் அக்னியில் விழுந்து உயிர் துறப்பேன்” என்றான். நிம்மதியுடன் ஊர் திரும்பினார் அந்தணர். அவருக்கு பிறந்த பத்தாவது குழந்தையும் இறந்தது. விஷயத்தை கேள்விப்பட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான். அப்போது “அர்ஜுனா! குழந்தையை காக்கும்படி கடவுளைச் சரணடையுங்கள் என்று தானே நீ சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து ‘நான் பார்த்து கொள்கிறேன்’ என்று ஆணவமாக சொல்லி விட்டாய். இப்போது குழந்தை இறந்து விட்டதே என்ன செய்வாய்?”எனக் கேட்டார். உண்மையை உணர்ந்த அர்ஜூனனின் ஆணவம் அழிந்தது. ஆனாலும் அவன் சபதம் செய்தபடி தீயில் விழுந்து உயிர் விட்டான். வைகுண்டத்தை அடைந்த அவன் மகாவிஷ்ணுவிடம், “பகவானே! உண்மையை உணர்ந்ததால் என் ஆணவம் முற்றிலும் அழிந்தது. அந்தணருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தாங்கள் உதவ வேண்டும்” என வேண்டினான். மகாவிஷ்ணு ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, “ சந்தான பாக்கியம் தரும் இதை வழிபட்டால் தீர்க்காயுள் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்’’ என வரம் அளித்தார். மகாவிஷ்ணுவின் வழிகாட்டுதலை ஏற்ற அர்ஜூனன், கையில் சிவலிங்கம் வைத்திருக்கும் பெருமாள் சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தான். ஈஸ்வரப் பட்டத்துடன் ‘பூர்ணத்திரயேஸ்வரர்’ என சுவாமி அழைக்கப்படுகிறார். அந்தணரும் இங்கு வழிபட்டு ஆயுள், ஆரோக்கியம் கொண்ட குழந்தைகளைப் பெற்றார். கோயிலின் உள்ளே பல்குண தீர்த்தம் உள்ளது. இங்குள்ள கூத்தம்பலத்தில் நந்தி சிலை உள்ளது. எப்படி செல்வது: எர்ணாகுளத்தில் இருந்து 9 கி.மீ., விசேஷ நாட்கள்: கார்த்திகை உற்ஸவம், மாசி சுவாதி முதல் திருவோணம் திருவிழா