பெங்களூரில் உள்ளது தர்மராய ஸ்வாமி கோயில். யுதிஷ்டிரருக்கான கோயில். இது 800 ஆண்டுகளுக்கு முந்தியது. திகளர்கள் என்பவர்கள் விவசாய கலை மற்றும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கிய ஒரு சமூகத்தினர். அந்த சமூகத்தினர் எழுப்பிய கோயில்தான் இது. திராவிட கட்டமைப்பில் காணப்படுகிறது இந்த கோயில். யுதிஷ்டிரன் (தர்மராயஸ்வாமி) பெயரில் இருந்தாலும் அவரை விட அதிகமாக திரவுபதி இங்கு வழிபடப்படுகிறார். அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன கண்ணனின் உருவமும் இருக்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் கரகத் திருவிழா வித்தியாசமானது. பெண்ணைப் போல வேடமிட்டபடி பூஜாரி தன் தலையில் கரகத்தை சுமந்தபடி தெருக்களில் நடனமாடியபடி வருவார். அப்போது அவர் திரவுபதியை பிரதிபலிப்பதாக சொல்கின்றனர். இதற்கு பின்னணி கதை உள்ளது. மகாபாரதப் போர் முடிவடைந்த பிறகு திமிராசூரன் என்ற அரக்கன் மக்களுக்குத் தொல்லை கொடுக்க, அவனை வீரகுமாரர்கள் என்ற பெயர் கொண்ட சேனையின் உதவியுடன் திரௌபதி வென்றார். பின்னொரு காலகட்டத்தில் பாண்டவர்களுடன் திரௌபதியும் சொர்க்கம் செல்வதற்காகக் கிளம்பி விடும்போது இந்த வீரகுமாரர்கள் அவரை உலகிலேயே தங்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டனராம். வருடத்துக்கு ஒருமுறை பூமிக்கு தான் சிலநாள் வந்து செல்வதாக அவர்களுக்கு வாக்களித்தார் திரவுபதி. அப்படி ஆண்டுதோறும் அவர் வருவதை சிறப்பிக்கஙன விழா நடத்துகின்றனர். சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவிலும் ஒரு தர்மராஜா ஆலயம் உள்ளது. இது மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.