காஞ்சிபுரம் மாவட்டம் எலுமியங்கோட்டூரில் தெய்வநாயகேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்புரிகிறார். தேவமங்கையான ரம்பை இவரை வழிபட்டு அருள் பெற்றாள். இந்த சிவலிங்கத்தை அர்ச்சகர்கள் தொடுவதில்லை ஒரு குச்சியால் ஆடை, மாலைகளை அணிவிக்கின்றனர். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் பறக்கும் கோட்டைகளை அமைத்தனர். அவற்றில் பறந்து சென்று தேவர்கள் வசிக்கும் இடங்களில் இறக்கி விடுவார்கள். இதன் அடியில் சிக்கும் தேவர்கள் அளவில்லாத கஷ்டத்திற்கு ஆளாயினர். இவர்களை அடக்க எண்ணிய சிவபெருமான் தேவர்களுடன் புறப்பட்டார். ஆனால் புறப்படும் முன் விநாயகரை வழிபட அவர்கள் மறந்தனர். எந்த செயலைத் தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது மரபு. அவ்வாறு செய்யாததால் சிவபெருமான் புறப்பட்ட தேரின் அச்சை முறித்தார் விநாயகர். மரமல்லிகை வனமாக இருந்த இத்தலத்தின் வழியாகச் சென்ற தேர் நிலை குலைந்தது. அதனால் சிவன் அணிந்திருந்த கொன்றை மாலை தரையில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அந்த இடத்தில் ஒரு கோயில் உருவானது. தேவர்களின் படைக்கு தலைமையேற்று சென்றதால் சுவாமிக்கு ‘தெய்வ நாயகேஸ்வரர்’ என பெயரிட்டனர். இங்குள்ள சிவலிங்கம் புனிதமானது என்பதால் பூஜையின் போது கூட அர்ச்சகர்கள் தொடுவதில்லை. குச்சியின் உதவியுடன் சுவாமிக்கு ஆடை, மாலைகள் அணிவிக்கின்றனர். தேவ கன்னியர்களான ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும் என்றும் அழியாத அழகுடன் இருக்க விரும்பினர். இதற்காக தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டனர். தெய்வநாயகேஸ்வரரை வழிபடும்படி அவர் தெரிவித்தார். அதன்படி சிவபூஜைக்காக தீர்த்தம் ஒன்றை ரம்பா உருவாக்கினாள். இது மல்லிகா புஷ்கரணி எனப்படுகிறது. அதில் மூவரும் நீராடி மல்லிகை, ரோஜா மலர்களால் வழிபட்டனர். பதினாறு பட்டை கொண்ட சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தனர். அரம்பையருக்கு அருள் செய்ததால் இத்தலம் ரம்பையங்கோட்டூர் எனப்பட்டது. தற்போது ‘எலுமியங்கோட்டூர்’ என்றாகி விட்டது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு மிக்கவர். சின்முத்திரை காட்டியபடி வலக்கையை மார்பில் வைத்த நிலையில் இருக்கிறார். வலது பாதம் மடங்கிய நிலையில் உள்ளது. அபூர்வ கோலத்தில் காட்சி தரும் இவரை தரிசித்தால் குரு தோஷம் நீங்கும். கோவிலின் நுழைவு வாசல் அருகே ரம்பை பூஜித்த ரம்பாபுரிநாதர் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. திருஞான சம்பந்தர் இங்கு வந்த போது முதியவர் வடிவில் சிவன் தோன்றி, ‘இத்தலத்தில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். அவரைக் குறித்து பதிகம் பாடு’ என்று சொல்லி மறைந்தார். ஆனால் சம்பந்தரால் கோயிலை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் பசு வடிவில் தோன்றிய சிவன் கோயிலுக்கு அழைத்து வந்தார். ஆவணி, பங்குனி மாதங்களில் ஆறுநாட்கள் மூலவர் மீது சூரியஒளி விழுகிறது. தினமும் கோபூஜை நடக்கிறது. எப்படி செல்வது: சென்னை-- அரக்கோணம் சாலையில் 30 கி.மீ துாரத்தில் கூவம் கிராமம். அங்கிருந்து 6 கி.மீ., எலுமியங்கோட்டூர்.