பதிவு செய்த நாள்
07
அக்
2021
04:10
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை9 மணிக்கு கணபதி ஹோமம், யாகசசாலை பூஜையைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் கோயில் பிரகார வீதியுலா நடந்தது. காலை9.40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனை, நடந்தது. இதில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், திருச்செந்துார் ஏஎஸ்பி ஷர்சிங் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கொடியேற்ற நிகழ்வில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளஅனுமதி வழங்கப்பட வில்லை. கோயிலுக்கு வரும் முக்கிய பாதைகள், கடற்கரைசாலை ஆகியவை தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தன. உடன்குடி, திருச்செந்துார்வழியாக வாகனங்களில் வரும் பக்தர்கள்அங்கேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோயிலைச்சுற்றியுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருள்வார். வரும்15ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி மகிசாசூரனை வதம் செய்கிறார். 16ம்தேதி அதிகாலை 3 மணி,5 மணி,6 மணிக்கு உற்சவமூர்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகார பவனியும் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடக்கிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள், தசரா குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5,50,100 எண்ணிக்கையில் காப்புகள் இன்று அக்.7ம்தேதி முதல் வழங்கப்படும். காப்புகளைஅரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.