பவானி: கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மகாளய அமாவாசையான நேற்று, ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் முக்கூடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக பவானி போலீசார், ஐயப்பா கோவில் மண்டபம், கூடுதுறை நுழைவு வாயில் பகுதி ஆகிய இடங்களில் பேரிகார்டு வைத்து பொதுமக்களை, உள்ளே அனுமதிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் தங்கள் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள், ‘தர்ப்பணம் கொடுக்காமல் செல்லமாட்டோம்’ எனக்கூறி, கூடுதுறை அருகே உள்ள காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில், பிண்டங்கள் வைத்து மூதாதையர்களை வேண்டி தண்ணீரில் கரைத்தனர். பின்னர் அங்கேயே குளித்து, காளிங்கராயன் வாய்க்கால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.