பதிவு செய்த நாள்
09
அக்
2021
10:10
சென்னை: கோவில் இடங்களுக்கான குத்தகை மற்றும் வாடகையை, ஆன்-லைன் வழியாக செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து 287 கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம்; 22 ஆயிரத்து 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து 665 காலிமனைகள் உள்ளடக்கிய 3.56 லட்சம் சொத்துக்கள் உள்ளன.இவற்றின் வாடகைதாரர்கள், ஆன்-லைன் வாயிலாக குத்தகை, வாடகை செலுத்தும் வசதியை, துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், மயிலை கபாலீஸ்வரர் கோவில் இணை கமிஷனர் காவேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், அமைச்சர் அளித்த பேட்டி:கோவில் சொத்துக்களை ஏலம், ஒப்பந்தம் வாயிலாக வாடகை, குத்தகைக்கு விடுவது குறித்து, விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வாடகைதாரர்களின் விபரங்கள் பெறப்பட்டு, நிலுவை தொகை, பதிவேட்டில் பதியப்பட்டு வருகிறது. கோவில் நிலங்கள், கட்டடங்களின் வாடகையை முறையாக வசூல் செய்ய, ஆன்-லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. வாடகை, குத்தகை செலுத்த, மாதந்தோறும் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணய குழு விரைவில் அமைக்கப்படும்.தொழில்நுட்ப வசதி இல்லாத வாடகைதாரர்கள், கோவில் அலுவலகத்தில் வாடகை செலுத்தி அதற்கான ரசீதை பெறலாம். இந்த திட்டம் வாயிலாக, முறையாக வாடகை செலுத்தாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.சென்னையில், குயின்ஸ் லாண்ட் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மீட்கப்படும். இவ்வாறு சேகர்பாபு கூறினார்.