மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
காரமடை அடுத்த கே.புங்கம்பாளையத்தில், பூமி நீளா சமேத திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திர நாளில், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். நேற்று திருவோணம் நட்சத்திரத்தின் முன்னிட்டு, திம்மராய பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை அடுத்து, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் பூமி நீளா சமேத திம்மராய பெருமாள், திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமங்கலத்தை அணிவித்தார். பின்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.