பதிவு செய்த நாள்
19
அக்
2021
04:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு நடக்கும் தீப திருவிழாவில், மகாரத தேரோட்டம் நடத்திட கோரி, சாதுக்கள் திருமுறை பாடியவாறு மாடவீதி வலம் வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 16ல், மகாரத தேரோட்டம், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க கடந்த செப்., 16ல், பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதையடுத்து, விழாவில் வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்தாண்டு, தீப திருவிழாவில் சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. மகா ரத ஓட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தாண்டு தீப திருவிழாவின்போது மகாரத தேரோட்டம், சுவாமி வீதி உலா நடத்திட கோரி, சாதுக்கள் மாட வீதியில், கைலாய இசை வாத்தியங்கள் இசைத்தவாறு, திருமுறை பாடி மாட வீதி வலம் வந்தனர்.