பதிவு செய்த நாள்
20
அக்
2021
04:10
பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 60 கிலோ அரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்திபெற்றது. புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுககிணறு, ஒரேகல்லிலில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உலக அளவில் வியக்க கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பவுர்ணமி, அரிசியால் சாதம் சமைத்து கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு காலை மகாபிஷேகம், மாலையில் அன்னாபிசேக அலங்கார தீபாராதனையும் நடைபெறும் வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று நடந்தது. காலை 7.30 மணிக்கு கணக்கவிநாயகருக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு கணக்கவிநாயகருக்கு தீபாரதனை, 9 மணிக்கு பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகிக்கு மகாபிசேகம் தீபாரதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவிலில் உள்ள மடப்பள்ளியில் 60 கிலோ பச்சரியால் சாதம் தயார் செய்யப்பட்டது. பின்னர், உலர்த்தப்பட்டு பேஸ்ட் போல ஆக்கப்பட்டு லிங்கத்தின் மீது அன்னம் சாத்தப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேக அலங்கார தீபாரதனை நடந்தது. நாளை (21ம் தேதி) பிரகதீஸ்வரருக்கு பிராட்சதை அபிஷேகம் நடக்கிறது.