பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
ராமேஸ்வரத்தில் மிகப் பெரிய வரவேற்பு நடந்தது. இதன் பிறகு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சமய சொற்பொழிவாற்றி சுவாமிஜி, சென்னை வந்து பல இடங்களில் பேசினார். ஒரு வழியாக தான் பிறந்த மண்ணை அடைந்தார். வங்காள சீடர்கள் சுவாமிக்காக நீண்டநாள் காத்திருந்து தாயைக் கண்ட சேய் போல் அவரிடம் பாசத்தைக் கொட்டினர். வெளிநாடுகளில் தான் திரட்டியிருந்த நிதி அனைத்தையும் தன் சீடர் பிரமானந்தரிடம் ஒப்படைத்த சுவாமிஜி, குட்டிக்ளைத் தான் தின்ன வேண்டும் தாய் ஆடுகளை சாப்பிட்டு விடக்கூடாது, என்றார். அதாவது, இந்த நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியையே செலவழிக்க வேண்டும் அசலைத் தொடக்கூடாது, என நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார். மேலும், நான் வெளிநாடுகளில் பார்த்தவரை நமது மதத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல ஒரு சங்கம் அவசியம் தேவை. இந்த நதியைக் கொண்டு நாம் ஒரு சங்கம் துவங்குவோம். குரு ராம கிருஷ்ணரின் பெயரை அதற்கு வைப்போம், என்றார். சில ஆண்டுகளில் சங்கம் மடமாக மாறியது, பேலூரில் ராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டது. சுவாமி பிரமானந்தர் மடத்தின் தலைவர் ஆனார்.
சுவாமிஜிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பல பெண்களும் சிஷ்யைகள் ஆயினர். ஒருமுறை நியூயார்க்கில் இருந்து வந்த மக்லியாடு என்ற இளம்பெண், சுவாமியுடன் காஷ்மீருக்குச் சென்றாள். அங்கே அழகியசிங்கர் சுவாமி நெற்றியில் திருமண் (நாமம்) இட்டிருந்ததைப் பார்த்து கேலி செய்தாள். சுவாமிஜிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எங்கள் நாட்டின் கலாச்சாரம், எங்கள் வழிபாட்டு விஷயத்தில் தலையிட நீ யார் ? என்று கேட்டு அவளை அடக்கினார். இந்தியா மீது அன்பு காட்டு. அதுவே நீ செய்யும் உதவி, என அவளுக்கு அறிவுரை சொன்னார். அவள் சுவாமிஜிக்கு 300 டாலர் பணம் கொடுத்தாள். அதைப் பெற்ற சுவாமிஜி உத்போதன் என்ற புதிய பத்திரிகை வளர்ச்சிக்கு செலவிட கொடுத்து விட்டார். தனக்கென ஒரு காசு கூட அவர் வைத்துக் கொண்டதில்லை. விவேகானந்தரின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சிஷ்யை சகோதரி நிவேதிதை. இவர் இங்கிலாந்து பெண்மணி. இங்கிலாந்து இந்தியாவுக்கு அளித்த செல்வம் இந்தப் பெண் என சுவாமிஜியே அவரைப் புகழ்ந்திருக்கிறார் என்றால், அந்தப் பெண்ணைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டியிருக்கிறது ! நோபிள் என்ற பெயருடன் வந்த அந்தப் பெண்ணுக்கு தீட்சை தந்து அவளுக்கு நிவேதிதா என்ற பெயர் சூட்டியவரும் அவரே !
சுவாமிஜியின் கருத்தைக் கவர்ந்த மற்றொரு பெண்மணியும் உண்டு. அவர் ஒரு காலத்தில் இமயமலை பகுதியில் சுற்றித்திரிந்த போது ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளை மீண்டும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அவள் ஒன்றும் பெரிய தபஸ்வி அல்ல, சாதாரணப் பெண். படகோட்டுபவள். அவளிடம் ஒருமுறை தண்ணீர் வாங்கிக் குடித்திருக்கிறார். அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, பேச்சுவாக்கில் அம்மா! நீ என்ன மதம் ? என்றார். அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள் என்றாள் அப்பெண். சுவாமிஜி தன்னை சிவபக்தன் என்று பெருமையுடன் சப்தமாக சொல்லிக் கொள்வார். அதேபோல் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் அவர்கள் மதத்தைப் பற்றி அவள் பேசியது சுவாமிஜிக்கு மிகவும் பிடித்துவிட்டது. மதம்எதுவாக இருந்தால் என்ன ! நாம் எந்த மதத்தை சார்ந்துள்ளோமோ அந்த மதத்தை உயர்த்திப் பேச வேண்டும். உணர்வுப்பூர்வமாக அதில் நம்பியிருக்க வேண்டும். இந்துக்கள் தங்கள் மதத்தை தாங்களே கேலி செய்வதில் இன்றுவரை சமர்த்தர்களாகத்தானே இருக்கிறார்கள்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்தால் சுவாமி என்ன சாப்பிடவா போகிறார் ? என்று கேலி, சுவாமிக்கு இரண்டு மனைவி என்றால் அதன் உள்ளர்த்தம் புரியாமல், நானும் இரண்டு வைத்துக் கொண்டால் என்ன தப்பு ? என்று கிண்டல் ! இப்படி தாங்கள் மதத்தை தாங்களே கேலி செய்யும் வேளையில், ஒரு பெண் தங்கள் மதத்தை உணர்வுப்பூர்வமாக பேசியது பற்றி சுவாமிஜி மகிழ்ந்தார். அவர் அவளைக் காணச்சென்ற போது கம்பளி நெய்து கொண்டிருந்தாள். இந்து சந்நியாசியை வரவேற்ற அந்தப் பெண் சீடர்கள் அவர்களை வரவேற்று உபசரித்தாள். மதநம்பிக்கைக்கு, இந்தப் பெண்ணே எடுத்துக்காட்டு, என்று சீடர்களிடம் சொன்னார் சுவாமிஜி. சுவாமிஜியின் இறுதிக்காலம் நெருங்கியது. ஒரு ஜூலை மாதம் முதல்தேதி. சுவாமிஜி பிரேமானந்தருடன் கங்கைக்கரையில் உலாவிக்கொண்டிருந்தார். ஓரிடத்தில் நின்று அவர், தன்னைச் சுட்டிக்காட்டி, இந்த உடல் இங்கு சாம்பலாகட்டும் என்றார். பிரேமானந்தருக்கு திக்கென்று இருந்தது. பிரேமானந்தரே ! நான் மரணத்துக்கு தயாராகி விட்டேன். நிரந்தர தவம் செய்யப் போகிறேன், என்று திரும்பவும் சொன்னார். அன்று ஏகாதசி என்பதால் சுவாமிஜிக்கு விரதம். சகோதரி நிவேதிதா அவரைக் காண வந்தார். அவருக்கு உணவளித்த சுவாமிஜி தானே பரிமாறினார். தானே கைகளை கழுவத் தண்ணீர் ஊற்றினார். கையைத் துடைக்க துண்டு எடுத்துக் கொடுத்தார்.
சுவாமிஜி ! நான் தானே உங்ளுக்கு இத்தகைய பணிகளைச் செய்ய வேண்டும். தாங்கள் செய்கிறீர்களே ! என்றாள் ஏதும் புரியாமல். ஏன், இயேசுநாதர் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவ வில்லையா ? என்று கேட்டார் சுவாமிஜி. நிவேதிதாவுக்கு புரிந்துவிட்டது. இயேசுநாதர் தன் இறுதிக்காலத்தில் தன் சீடர்களுக்கு இவ்வாறு செய்தார். அப்படியானால் சுவாமிஜிக்கு... அதுவும் இளைய வயதில் ! 1902 ஜூலை 4. அந்த நாளும் வந்தே விட்டது. அன்று வெள்ளிக்கிழமை. காலையில் டீ குடித்தார். வழக்கமாக பூஜை அறையின் கதவுகளை திறந்து வைத்து தியானம் செய்யும் சுவாமிஜி கதவுகளை மூடச்சொன்னார். வழக்கமான நேரத்தை விட அதிகநேரம் தியானம் செய்தார். கண்விழித்ததும், காளிமாதா பற்றி ஒரு இனிய பாடல் பாடினார். அதுதான் பேலூர் மடம் கேட்ட கடைசிப்பாடல். பொதுவாக தனித்து சாப்பிடும் சுவாமி அன்று எல்லா சீடர்களுடனும் அமர்ந்து சாப்பிட்டார். சீடர் சுத்தானந்தரிடம் சுக்ல யஜூர் வேத புத்தகம் கொண்டு வரச்சொல்லி ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்தையும், விளக்கத்தையும் படிக்கச்சொன்னார். பகல் ஒரு மணிக்கு பிரம்மச்சாரிகளுக்குரிய லகுகௌமுதி என்ற நூலைப் போதித்தார். அதை விளக்கிச் சொல்வதற்காக அவர் சொன்ன தமாஷ் கதைகள், சிரிக்க வைத்த துணுக்குகள் எல்லாம் அலுப்புத்தட்டாமல் இருந்தன.
மூன்றுமணி நேரம் வகுப்பெடுத்தும் சற்றும் அசரவில்லை அவர். மீண்டும் பிரேமானந்தருடன் வெளியில் புறப்பட்டார். வேதத்தைக் கற்றுத்தருவதால் மூட நம்பிக்கைகள் ஒழியும் என அவரிடம் சொன்ன சுவாமிஜி, அதற்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார். இரவு மடத்துக்கு திரும்பியதும் சீடர்களை அழைத்து, ஆண்டவனைத் தேடும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்தியா வாழும். அரசியலும், சமூகச் சச்சரவுகளிலும் ஈடுபட்டால் இந்தியா செத்துவிடும், என்று போதித்தார். பின்னர் இரவு 8 மணி வரை தியானம் செய்தார். ஒரு சீடரை அழைத்து, என் அறைக்கதவுகளை திறந்தே வை. கொஞ்சம் விசிறு என்றார். சீடர் விசிறினார். சிறிது நேரததில், மகனே ! என் காலை பிடித்து விடு, என்றார். சீடர் காலைப் பிடித்தார், ஒன்பது மணி இருக்கும், கால்கள் சற்றே நடுங்குவது போல் தெரிந்தது. ஆம்.. சுவாமிஜி இந்த தேசத்தில் வீசிய காற்றை தன் கடைசி மூச்சாக ஏற்று மீளாத்துயிலில் ஆழ்ந்தார். 39 ஆண்டுகள், 5 மாதம், 24 நாள் இந்த தேசத்தின் ஆன்மிகப்புதல்வராய் வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் இன்றும் வாழ்கிறார்.... என்றும் வாழ்கிறார்... நம் இதயங்களில் !