பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
ஒரு வழியாக ஆராவாரம் அடங்கியதும், சுவாமிஜி இந்துமதம் குறித்த கருத்துக்களை எடுத்து வைத்தார். அன்புள்ளம் கொண்டவர்களே ! இங்கே பேசியவர்கள், உலகில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது பற்றியும், அதை தங்கள் மதத்தின் சார்பில் உலகெங்கும் பரப்பியதாகவும் பெருமைப்பட்டனர். ஆனால், சகிப்புத்தன்மை என்ற பதத்துக்கு சொந்தமானதே இந்துமதம் தான். எங்கள் மதம் அதைத்தான் முக்கிய போதனையாகக் கொண்டுள்ளது. அடுத்து உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. எங்கள் மதம் யாரையும் விலக்குவதில்லை. இந்துமத, தர்மங்களை போதிப்பது சமஸ்கிருதம் என்ற நாட்டு மொழி. இந்த மொழியில் ஒரு விசேஷம் உண்டு. விலக்கி வைத்தல் என்ற சொல்லுக்கு இந்த மொழியில் வார்த்தையே கிடையாது. என்றால் எங்கள் மதத்தின் பெருமையைப் பார்த்துக் கொள்ளுங்களேன். எல்லோரும் எங்களுக்கு வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. பலநதிகள் பல இடங்களில் தோன்றினாலும் அவை ஒன்றாகக் கலப்பது கடலில் தான். அதுபோல் பலவிதமான வழிபாடு முறை, மனப்பக்குவம் கொண்டிருந்தாலும், அவை குறுகிய வழியோ, நேர் வழியோ அவை இறைவனிடம் தான் கொண்டு சேர்க்கின்றன.
இன்று மக்களை ஆட்டிப் படைப்பது பிரிவு மனப்பான்மை, மதவெறி ஆகியவை தான். மதவெறி இந்த உலகத்தை ரத்த சகதியில் ஆழ்த்தியிருக்கிறது. நாகரீகத்தை அழித்து விட்டத இந்த வெறி. மத வெறியும், பிரிவு மனப்பான்மையும் பெரிய பூதங்களாக நின்று நம்மை பயமுறுத்துகின்றன. இந்த பூதம் அழிக்கப்பட்டால் உலக சமுதாயம் முன்னேறும். ஆனாலும், அது அழியும் காலம் வந்துவிட்டது. என்று பேசிக்கொண்டே சென்றார். சுவாமிஜி அன்று நிகழ்த்திய சிறிய உரை தான். செப்டம்பர் 19 தனது பேருரையை சுவாமிஜி வழங்கினார். அதில் முழுக்க முழுக்க இந்து மதத்தின் பெருமையைப் பற்றி சொன்னார். அங்கும் தனது ஆணித்தரமான கருத்துக்களை சொன்னார். இந்தியாவுக்கு மிஷனரிகள் வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில், எங்கள் தேசத்தில் உள்ள மதத்தில் உலகத்துக்கு தேவையான அத்தனை கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன, என்பதை தெளிவாகச் சொன்னார். பயமின்றிச் சொன்னார். இந்த மகாசபை கூட்டம் 17 நாட்கள் நடந்தது. இந்நாட்களில் சுவாமிஜி பேசிய பேச்சு அமெரிக்க மக்களை சிந்திக்க வைத்தது.
அது மட்டுமல்ல ! இந்த மகாசபை கூட்டம் சில நாட்களில் கலகலத்தது. கூட்டத்தினர் அவ்வப்போது வெளியே செல்லத் துவங்கினர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் விவேகானந்தர் பேசப்போகிறார் என அறிவிப்பு செய்வார்கள். வெளியே நிற்கும் எல்லோரும் அரங்கத்திற்குள் ஆஜராகி விடுவார்கள். மேலும், சிகாகோ நகர பத்திரிகைகளில் சுவாமிஜியின் படமும் பேச்சும் வெளியானது. இதைக் கண்டு அந்நாட்டின் பிறபகுதி பத்திகைகளும் செய்தி வெளியிட பிரபலம் ஆகிவிட்டார் சுவாமிஜி. சிகாகோ நகரின் பல இடங்களில் சுவாமிஜியின் படங்கள் ஒட்டப்பட்டன. இப்போது நாமெல்லாம் நம் வீடுகளில் சுவாமிஜி கையைக் கட்டிய நிலையில் ஒரு படம் வைத்திருக்கிறோமோ ! அந்தப் படத்தை சுவாமிஜி சிகாகோ சர்வமத மகாசபை கூட்டத்தில் முதல் நாள் பேசிய போது எடுத்த படம் என்ற தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமிஜியின் பேச்சைப் பற்றி விமர்சித்த நியூயார்க் ஹெரால்ட் பத்திரிகை இந்த மகான் பேச்சுக்கு பிறகு, இந்தியாவுக்கு நம் நாட்டு மிஷனரிகளை அனுப்புவது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று வர்ணித்தது. மற்றொரு பத்திரிக்கையில், இவர் சபைக்குள் மக்களை கடந்து சென்றாலே அரங்கத்தில் கைதட்டல் எழுகிறது என எழுதியது. சில சமயங்களில் மகாசபையார் மற்றொரு டெக்னிக் செய்வார்கள்.
விவேகானந்தனர் முதலிலேயே பேசிவிட்டால் கூட்டம் கலைந்து விடும் என்பதால், அவரை கடைசியாக பேச வைப்பார்கள். அதுவரை புழுக்கம் நிறைந்த அந்த அரங்கத்தில், மக்கள் விசிறியபடியே காத்துக் கிடப்பார்கள். மகாசபை கூட்டத்திற்கு பிறகு இன்னும் சில இடங்களில் பேசினார் சுவாமிஜி. இதற்காக அமெரிக்கா மக்கள் தந்த நிதியை அவர் ஏற்றுக்கொண்டார். ஏனெனில், இந்தியாவில் ஒரு பெரிய மடத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது விவேகானந்தரின் நோக்கம். அமெரிக்க மக்கள் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்ற விபரம் கூட சுவாமிக்கு தெரியாது. அவர், லயன் என்ற அம்மையார் வீட்டில் தங்கியிருந்தார். அந்த நிதியை அவரிடம் கொடுத்து, இந்த பணத்துக்கு எவ்வளவு மதிப்பு ? என கேட்டு தெரிந்து கொள்வார். மேலும், உங்கள் நாட்டு மக்கள் எங்கள் மக்களுக்காக செய்யும் இந்த தாராள உதவியை என்னால் மறக்க முடியாது என நன்றியுடன் சொல்வார். அமெரிக்க பெண்கள் சிலர், சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகிய துண்டு அப்போது லயன் அம்மையார், இந்தப் பெண்கள் இவ்வளவு நெருக்கமாய் பழகுகிறார்கள் ! இளம் வயதினரான நீங்கள் சபலப்பட்டு விடுவீர்களோ என அஞ்சுகிறேன், என்றார். அதற்கு சுவாமிஜி, நான் மகாராஜாக்களின் அரண்மனையில் தங்கியுள்ளேன். அப்போது அடிமைப்பெண்கள் எனக்கு மயில்பீலியால் விசிறுவார்.
அந்த நேரத்திலும் நான் சபலப்பட்டதில்லை என்றார். நியூயார்க்கில் ஒரு மன்றத்தை நிறுவி, அங்கிருந்த மக்களில் சிலருக்கு துறவு அளித்தார். இந்துமதத்தின் கொள்கைகளை நிரந்தரமாக பரப்பும் வகையில் அந்த மன்றத்தின் பணிகள் இருக்க வேண்டும் என்றார். அமெரிக்கா பயணம் முடிந்த பின், லண்டன் சென்றார் சுவாமிஜி. அவரது ஐரோப்பிய பயணமும் சிறப்பாக அமைந்தது. லண்டனக பயணம் முடிந்து தாயகம் திரும்பிய போது, கப்பலில் சுவாமிஜிக்கும் ஒரு கிறிஸ்தவ மதபிரசாரகருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரசாரகர் தர்க்க ரீதியாக சுவாமிஜியிடம் தோற்றார். அந்த ஆத்திரத்தில், இந்து மதத்தைப் பற்றி தவறாகப் பேசினார். அவரை சுவாமிஜி எச்சரித்தார். அவர் கேட்பதாக இல்லை. அவரை அப்படியே சட்டையைப் பிடித்து தூக்கி, இனியும் என் மதத்தைப் பழித்தால் உன்னை அப்படியே கடலுக்குள் தூக்கி எறிந்து விடுவேன், ஜாக்கிரதை, என்றார். அவர் பயந்து நடுங்கி, அதன் பிறகு சுவாமிஜிக்கு சேவையே செய்யத் துவங்கி விட்டார். அவரவர் மதம் அவரவருக்கு அன்னையைப் போன்றது. நம்மைப் பெற்றவளிடம் உள்ள பக்தி மதத்திடம் இருக்க வேண்டும். ஆனால், இங்கே நாள்தோறும் மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நீயோ பேசாமல் அமைதியாக இருக்கிறாய் ? என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒரு வழியாகப் கப்பல் இலங்கையை அடைந்தது. அன்றைய இலங்கை இந்தியாவுடன் சேர்ந்திருந்தது. தாய் மண்ணை மிதித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் விவேகானந்தர். பின்னர் கப்பல் பாம்பன் கடற்கரையை அடைந்தது. மகிழ்ச்சி பொங்க தாய் மண்ணில் கால் வைத்தார் சுவாமிஜி.