பதிவு செய்த நாள்
10
நவ
2010
05:11
ஓம் காளி... ஜெய் காளி... என்ற கோஷம் விண்ணை முட்டுமளவு ஒலித்துக் கொண்டிருக்கும் நகரம் அது. அந்த கோஷம் நள்ளிரவு வேளையில் கூட ஆங்காங்கே கேட்கும். அம்பிகையை வீரத்தின் சின்னமாக பாவித்து வணங்குவர் அந்நகரத்து மக்கள். ஆம்... கல்கத்தா...அது காளியின் நகரம். அந்நகரத்தின் வடக்கே இருந்த சிம்லா என்ற பகுதியில் அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் இருந்து மங்கள வாத்தியங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. புதுப்பெண் புவனேஸ்வரி சர்வ அலங்காரங்களுடன் ஒரு சாரட்டில் அழைத்து வரப்பட்டாள். மாப்பிள்ளை விஸ்வநாதன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தான். இருக்காதா பின்னே...! கல்வியும், பணமும் இல்லாத மனைவியர் மீதே பாசம் செலுத்தும் ஆண்மக்களை கொண்டது இந்த புண்ணிய தேசம். மனைவி பிரிந்து விட்டால் சிவபெருமானே மனம் வெம்பிப் போகிறார் என்று கதை சொல்லும் நாடு இது... நிலைமை இப்படி இருக்கும் போது, படித்த ஒருத்தி, அதிலும் செல்வச்சீமாட்டி தனக்கு மனைவியாக வாய்க்கிறாள் என்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகத்தானே இருக்கும்! புவனேஸ்வரி ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எல்லாப் பாடல்களையும் ஒரே மூச்சில் சொல்லி விடுவாள்.செல்வ வளமிக்கவள் என்றாலும், எளிமையையே விரும்பினாள். வளமைக்கு மத்தியிலும், தன்னிடம் ஒரு கைத்தொழில் இருக்க வேண்டுமென அவள் நினைத்தாள். அதன் விளைவு அவள் தையல் கற்றுக் கொண்டாள். சமையலில் அவள் ஒரு பெண் நளன். இறைப்பற்று மிக்க அவள், காளிமாதா! என் குடும்பத்துக்கு பொன்னைக் கொடு, பொருளைக் கொடு. என் வக்கீல் கணவருக்கு அதிக வழக்குகளைக் கொடு. அவற்றில் எல்லாம் அவர் ஜெயக்கொடி நாட்டி, உலகப்புகழ் பெறும் வாய்ப்பைக் கொடு, என்று உலகியல் சார்ந்த விஷயமாக கேட்டதே இல்லை.
தாயே! நீ என்ன தர வேண்டுமென நினைக்கிறாயோ அதைக் கொடு. அது துன்பமாகக் கூட இருக்கட்டுமே! அந்த துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் தான் நான் உன்னை அடையமுடியும் என்றால், அதை புன்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என்னையே உன்னிடம் சமர்ப்பித்த பிறகு, நீ எதைத் தந்தாலும் அது உன்னைச் சார்ந்தது தானே! என்பாள். எவ்வளவு பெரிய உயர்ந்த உள்ளம் பாருங்கள்! ஆம்... உலகத்திற்கே ஒளிதரப்போகும் வீரமகனைப் பெறப் போகும் தாயல்லவா அவள்! தைரியம் அவள் உடலோடு கலந்ததாகத்தானே இருக்கும்! விஸ்வநாதன் மட்டுமென்ன...சாதாரணமான மனிதரா? அவரது கதை மிகப்பெரியது. கல்கத்தாவிலேயே புகழ் பெற்ற தத்தர் குடும்பம் அது. அவரது முப்பாட்டனார் ராமமோகன தத்தரே ஒரு வக்கீல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! கல்வி என்றால் கிலோ எவ்வளவு என கேட்கப்பட்ட அந்தக் காலத்தில், வக்கீல் குடும்பம் என்றால் கொஞ்ச நஞ்ச மதிப்பா இருந்திருக்க வேண்டும்! ராம மோகன தத்தருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் காளி பிரசாத். இன்னொருவர் துர்கா சரணர். துர்கா சரணரும் தந்தையைப் போலவே மிகப்பெரிய படிப்பாளி. சமஸ்கிருதம், ஆங்கிலம்...ஏன்...பாரசீக மொழியையும் கற்றுக் கொண்டார். அவற்றில் திறம்பட பேசுவார். படிப்பார். எழுதுவார். இவ்வளவும் இருந்தால், அவருக்கு பெண் கொடுக்க ஒரு கூட்டமே மொய்க்காதா? ஆனால், துர்காசரணருக்கோ இல்லற வாழ்வில் நாட்டமில்லை. உறவினர்களும், தந்தையும் அவரைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினர். அந்த அன்புப்பிடியில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. திருமணமும் முடிந்து விட்டது. அவருக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்தான்.
விஸ்வநாதன் பிறந்த பிறகு, துர்காசரணருக்கு மீண்டும் துறவற எண்ணம் மேலோங்கியது. ஒருநாள் அவர் வீட்டை விட்டு போய்விட்டார். அப்போது விஸ்வநாதனுக்கு வயது மூன்றுதான். கணவனைக் காணவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கலங்காத மனதுடன் மகனை தனியே வளர்த்தாள் சரணரின் மனைவி. ஒருநாள், காசிக்குப் புறப்பட்டாள். கங்கையில் நீராடிவிட்டு, விஸ்வநாதர் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். கோயில் படிக்கட்டில் ஏறினாள். திடீரென கண்கள் சுழன்றன. அப்படியே மயங்கி விழுந்து விட்டாள். யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்தனர். விழித்தாள். அதிர்ந்து விட்டாள். நீங்களா...? ஆம்...தன் முன்னால், கண்ணுக்கு கண்ணான கணவர் துர்காசரணர் இருப்பதைப் பார்த்தாள். குழந்தை விஸ்வநாதன் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தான். துர்காசரணர் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளாலும் ஏனோ பேச முடியவில்லை. கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தது. கணவரைத் தன்னோடு சேர்த்து வைத்த விஸ்வநாதருக்கு மனதால் நன்றி தெரிவித்தாள். தன்னோடு கல்கத்தாவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்தாள். துர்காசரணரின் நிலையோ வேறு மாதிரியாக இருந்தது. மனைவியை நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்தாலும், அவர் மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லை. நீ சுகமா, குழந்தை சுகமா? உறவினர்கள் நலமா? எதையுமே அவர் கேட்கவில்லை.
மாயை..இவ்வுலக வாழ்க்கை மாயை என்று மட்டும் அவளிடம் மெதுவான குரலில் சொன்னார். அதாவது, உன்னை என் மனைவியாக நான் பார்க்கவில்லை. நீ யாரோ ஒரு பெண். உனக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தேன். மீண்டும் உன்னுடன் சேர்ந்து வாழ என்னால் இயலாது. இல்லறத்தை என் மனம் நாடவில்லை என்பதே அவர் மாயை என்று சொன்னதன் பொருள். இது அவளுக்கும் புரிந்து விட்டது. இவர் இனி இல்லறத்தை நாடமாட்டார். காசியில் துறவியாக இருக்கவே விரும்புகிறார் என்று. நியாயம் தான்...இத்தனை நாளும் இவர் நம்மைப் பிரிந்து துறவியாக வாழ்ந்து விட்டார். இவரைப் பிரிந்ததால் நானும் துறவி போல வாழ்ந்து விட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும் அதனால் ஆகப்போவதென்ன? அவருடைய மனநிலையையே நானும் வளர்த்துக் கொள்கிறேன் அவள் அவரிடம் ஏதும் பேசவில்லை. எழுந்தாள். அவரைத் திரும்பியே பார்க்கவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தாள்.